Thursday, February 7, 2013

விஸ்வரூபம் சில புரிதல்கள்!

விஸ்வரூபம்’ சிலரின் விஷ ரூபத்தை வெளிச்சப்படுத்திக் காட்டியிருக்கிறது. சாதாரணமாக அந்தப் படம் வெளியாகி இருந்தால், கமல் மீது இப்போது உண்டாகியிருக்கும் ஆதரவும் அனுதாபமும் இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான். ‘ப்ரிவியூ’ காட்சி பார்த்த முஸ்லிம் அமைப்பினரின் மெல்லிய முணுமுணுப்புகளுக்குக் காரம், மணம் கூட்டி ஜெயலலிதா அரசாங்கம் செயல்பட்டதே இப்போதைய கேயாஸுக்கு முக்கியமான காரணம்.

முஸ்லிம் அமைப்புகள், தமிழக அரசாங்கம், சென்னை உயர் நீதிமன்றம், டெல்லி உச்ச நீதிமன்றம், சென்சார் போர்டு ஆகிய ஐந்து மண்டலங்களுக்கு இடையில் ‘விஸ்வரூபம்’ படம் பகடையாக உருட்டிவிடப்பட்ட சமயம் கருணாநிதி காட்சிக்கு வந்தார். ஆக்கவும் அழிக்கவும் வல்லவரான அவர் விட்ட ஓர் அறிக்கைதான், அதுவரை கருத்து சொல்லாமல் இருந்த ஜெயலலிதாவை, வெளியில் அழைத்து வந்து நிருபர்களுக்கு முன் அமரவைத்தது. மீடியாக்களைத் தானாக அழைத்து, சர்ச்சைக்குரிய கேள்விகளைத் தனக்குத்தானே கேட்டுக்கொண்டு, அதற்குப் பதிலும் சொன்னார்.

‘ ‘விஸ்வரூபம்’ படத்தை ஏன் தியேட்டரில் ரிலீஸ் ஆக நான் அனுமதிக்கவில்லை தெரியுமா? அது 543 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. அத்தனை தியேட்டர்களுக்கும் மூன்று ஷிஃப்ட் வீதம் பாதுகாப்பு போடவேண்டுமானால், 56 ஆயிரம் போலீஸ் தேவை. அவர்கள் இல்லை. அதனால்தான் தடைபோட வேண்டியதாகிவிட்டது’ என்றார், ‘இரும்பு மனுஷி’ என்று பெயர் எடுத்திருந்த ஜெயலலிதா. ஒரே நாள் இரவில் ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பினால் தமிழ்நாட்டின் நிர்வாகம் ஸ்தம்பிக்கும் என்று தெரிந்தும், அவர்களை டிஸ்மிஸ் செய்து, அவர்களுக்குப் பதிலாக பல்லாயிரம் பேரை மொத்தக் குத்தகைக்கு வேலைக்கு எடுத்துக்காட்டியவர் இதே ஜெயலலிதாதான். கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையைத் தீர்மானிப்பது 11 லட்சம் அரசு ஊழியர்கள். அதில் பத்தில் ஒரு பகுதி டிஸ்மிஸ் செய்யப்பட்டபோது வராத கரிசனம், ‘விஸ்வரூபம்’ விஷயத்தில் வந்துள்ளது.

முன்னர் தமிழ்நாட்டில் ஆடு, கோழி பலியிடுவதைத் தடை செய்தார் அவர். கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம் அது. தமிழகத்தில் லட்சக்கணக்கான கோயில்களில் இது கொந்தளிப்பை உருவாக்கினால், அதனை அடக்குவதற்கான போலீஸ் படை நிச்சயம் தமிழகத்தில் இருந்திருக்காது. ஆனால், அதனையும் மீறி முடிவெடுத்தார் என்றால், அதில் ஒரு நோக்கம் இருந்தது. அப்படித்தான் ‘விஸ்வரூபம்’ விவகாரத்திலும் சட்டம்-ஒழுங்கை மீறிய ஒரு நோக்கம் அவருக்கு இருப்பதை அப்பாவிகள்கூட உணர முடியும்.

‘என்னுடைய அரசியல் எதிரியான கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் தயாரித்து வெளியிடும் படங்களைக்கூட நான் தடைசெய்யவில்லை. எனக்கு யார் மீதும் தனிப்பட்ட வெறுப்பு கிடையாது. கமல்ஹாசன் எந்த விதத்திலும் எதிரி கிடையாது’ என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டே, மறுபுறம் உயர் நீதிமன்றத்தில் விஸ்வரூபத்துக்கு எதிராக வாதாட வேண்டிய அவசியத்தின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதை உணர முடிகிறது.

‘வேட்டி கட்டிய தமிழரான ப.சிதம்பரம் பிரதமர் ஆக வேண்டும். இதைச் சொல்வதற்கு நான் யார் என்றால், அதனைச் சொல்லும் உரிமை எனக்கு இருக்கிறது’ என்று கமல் பேசிய அதே மேடையில் இருந்த கருணாநிதி, ‘வேட்டி கட்டியவர்தான் பிரதமராக வரவேண்டும் என்று கமல் சொன்னபோது நீங்கள் கைதட்டினீர்கள். அதுவே சேலை கட்டியவர் வரக் கூடாது என்பதற்கு ஆதரவான தீர்ப்பு’ என்று கொளுத்திப்போட்டார்.

தனது பேட்டியில், ‘அப்படிச் சொல்வதற்கு கமல்ஹாசனுக்கு உரிமை உண்டு. அதனைப் பற்றிக் கவலைப்படவில்லை’ என்ற பதிலோடு ஜெயலலிதா நிறுத்தி இருந்தால், அவரது பெருந்தன்மை வெளிப்பட்டு இருக்கும். ஆனால், ‘நாட்டின் பிரதமரை கமல்ஹாசன் தேர்ந்தெடுக்க முடியாது’ என்று உரக்கச் சொல்லி, தன்னுடைய கோபத்தைப் பதியவைத்தார். ‘பாதுகாப்புக்குப் போதுமான போலீஸ்காரர்கள் இல்லை!’ என்று சொல்வது போலியான காரணம்தான் என்பதை உணர்த்திவிட்டது இந்தப் பதில். மொத்தத்தில் விஸ்வரூப விவகாரம், தனிநபர் ஒருவர் சினிமா பிரபலத்தைச் சீண்டும் 2013-ம் வருட அத்தியா யமாக முடிந்திருக்கிறது. 

இப்படிப்பட்ட சீண்டல்கள்தான் சினிமாக்காரர்கள் சினம் கொண்டு அரசியல்வாதிகளைத் திரும்பச் சீண்டும் தமிழக அரசியல் கலாசாரத்தின் இயல்பு. அண்ணாவுக்குப் பிறகு நெடுஞ்செழியன் வரவேண்டும் என்று சீனியர்கள் நினைத்தபோது, எம்.ஜி.ஆர். என்ற பிம்பம் கருணாநிதியை வழிமொழிந்தது. அளவுக்கு மீறி அவரை ஆதரித் தார். ஆனால், ‘பிள்ளையோ பிள்ளை’ என்று கருணாநிதி மனம் மாற ஆரம்பித்ததும், எம்.ஜி.ஆரும் இடம் மாறத் துடித்தார். ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படப்பிடிப்புக்குக் கிளம்பிய எம்.ஜி.ஆரை வழி அனுப்பிவைக்க விமானநிலை யத்துக்கு வந்தார் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி. ஆனால், படம் வெளியானபோது இருவரும் இரு வேறு துருவத்தில் இருந்தார்கள். ‘நடிகை ஒருவரை மதுரை மாநாட்டுக்கு அழைத்து வர அனுமதி கேட்டார். அதனை மாவட்டச் செயலாளர் மதுரை முத்து சம்மதிக்கவில்லை’ என்று கருணாநிதி ஆட்கள் பரப்பினார்கள்.

‘இது திராவிட இயக்கமப்பா… இங்கு இது தாங்காது’ என்று கருணாநிதி அன்று சொன்னாராம். (பிற்காலத்தில் குஷ்புவைக் கொண்டுவரும் அளவுக்கு கருணாநிதி மனப்பக்குவம் பெற்றது திராவிட இயக்கத்தின் பாவம்!) இந்த மன வேற்றுமைகள் எம்.ஜி.ஆரைத் தனிக் கட்சி ஆரம்பிக்கத் தூண்டின. சமாதானம் பேச கருணாநிதியிடம் அனுமதி பெற்று, நாஞ்சில் மனோகரனும் முரசொலி மாறனும் எம்.ஜி.ஆரிடம் போன நேரத்துக்கு இடையில் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ கட் அவுட் கொளுத்தப்பட்டது. சமாதானத்தை நிராகரித்து, சண்டையை அறிவித்தார் எம்.ஜி.ஆர். அதற்கு எதிர்வினையாக, கட்சியை விட்டு நீக்குவார்கள் என்று எம்.ஜி.ஆர். நினைக்கவில்லை. முதலில் அதிர்ச்சி அடைந்தார். ஆனால், ஊரெங்கும் ரசிகர்கள் வந்து கொந்தளிக்க ஆரம்பித்தார்கள். ‘தூக்கி எறிந்த சர்வாதிகாரம்… வாரி அணைத்த மக்கள் கூட்டம்’ என்று பேனர் போட்டு, தன்னுடைய கட்சியை எம்.ஜி.ஆர். தொடங்க… கருணாநிதியின் சிறு சீற்றமே அடித்தளம் அமைத்தது.

இன்று ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை. கொடியை வெளியிடவில்லை. ஆனால், ஜெயலலிதாவுக்கான அச்சுறுத்த லாக அவர் கடந்த 17 ஆண்டு களாக இருக்கிறார். ‘பாபா’ படத்துக்கு பா.ம.க. காட்டிய எதிர்ப்பு, அவரது ரசிகர்களை ஏழு எம்.பி. தொகுதிகளுக்கும் எரிமலையாகக் கொந்தளிக்க வைத்தது. கல்யாணப் பத்திரிகை யைக் கொண்டுபோய்க் கொடுத்து சமரசம் செய்து கொள்ள வேண்டிய அவசி யத்தை ராமதாஸ் குடும்பத்துக்கு ஏற்படுத்தியது ரஜினியின் பிம்பம்.

‘கல்யாண மண்டபத்தை இடிக்காமல் பாலம் கட்ட முடியுமா?’ என்று கெஞ்சிக் கேட்கத்தான் கோபாலபுரம் வந்தார் விஜயகாந்த். ‘கருணாநிதி எடுக்கப்போகும் சரித்திரப் படத்தில் நடிக்கப்போகிறார் கேப்டன்’ என்று அவரது ஆட்களே பொய்க் காரணங்கள் பரப்பினார்கள். ‘சமரசம் செய்துகொள்ள மாட்டேன்’ என்று அன்றைய மத்திய அமைச்சர் வறட்டுப் பிடிவாதம் காட்டியதன் விளைவு, விஜயகாந்தைக் கூட்டணிக்குள் சேர்த்துக்கொண்டால்தான் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயிக்க முடியும் என்ற பரிதாப கதிக்கு இன்று தி.மு.க. ஆளாகி இருக்கிறது. இப்படி அரசியல் தலைவர்கள், தங்களை படைப்புக் கடவுள்களாக நினைத்துச் செயல்பட்டு, சினிமாக்காரர்களைச் சீண்டும்போது புதுக் கட்சிகள் பிறக்கின்றன. அடுத்து, கமலையும் கொண்டுவந்து சேர்க் கும் வேலையை ஜெயலலிதா செய்துள்ளார்.

ஆனால், இதற்கு முஸ்லிம் சகோதரர்கள் பலியாகிவிட்டதுதான் எதிர்பாராத திருப்பம். ‘இன்னொசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்’ பட விவகாரத்துக்கும் ‘விஸ்வரூபம்’ சர்ச்சைகளுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. அது நபிகள் நாயகம் பற்றி அவதூறு பரப்பிய படம். ‘விஸ்வரூபம்’ மதத்தின் பெயரைச் சொல்லி, பயங்கரவாதத்தில் ஈடுபடும் தீவிரவாதிகளைப் பற்றிய படம். இப்படியான பயங்கரவாதிகளுக்கு மதத்தைவிடத் தீவிரவாத எண்ணம்தான் முதல் அடிப்படை. அந்த பயங்கரவாத சிந்தனைகளை இங்கு உள்ள நம் முஸ்லிம் சகோதரர்களே ஏற்க மாட்டார்கள். தங்களுடைய நம்பிக்கைகளுக்கு ஊறு ஏற்படாத அமைதியான வாழ்க்கையை அமைத்துக்கொள்வதே அனைத்து முஸ்லிம்களின் நோக்கம். ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் உள்ள தீவிரவாத அமைப்புகள் ஒருகாலத்தில் அமெரிக்காவினால் வளர்க்கப்பட்டு, இன்று அவர்களாலேயே அழிக்கப்படுகிறார்கள். எனவே, இந்தப் பிரச்னையுடைய உருவாக்கமும் பிழையானது. குண்டு வைப்பவன் இஸ்லாமியராகவோ, கொள்ளை அடிப்பவர் இந்துவாகவோ, போதை மருந்து கடத்துபவர் கிறிஸ்துவராகவோ இருப்பதற்காக அந்தச் சமூகத்தினர் கோபப்பட என்ன இருக்கிறது. அந்தச் சமூகத்தில் பிறந்த களை அது. அது களையப்பட வேண்டும் என்று நினைப்பவரே உண்மையான முஸ்லிம், இந்து, கிறிஸ்துவராக இருக்க முடியும். கோடிக்கணக்கான முஸ்லிம் சகோதரர்களில் இத்தகைய பயங்கரவாதிகள் சில நூறு பேர்தான். நூறு பேருக்காக, மொத்த சமூகத்தையும் பழிப்பது எவ்வளவு பாவமோ, அதைவிடப் பாவ கரமானது… அவர்கள் முஸ்லிம் என்ற நோக்கத்துக்காக மட்டுமே அவர்களை ஆதரிப்பது. கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டிப் படம் எடுத்தாலும், குரானின் மகத்துவத்தை யாரும் நிராகரித்துவிட முடியாது.

தமிழ்நாட்டுச் சிறைகளில் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் விசாரணையே இல்லாமல் 15 அல்லது 20 ஆண்டு களாக அடைக்கப்பட்டுக்கிடக்கிறார்கள். எந்தக் குற்றமும் செய்யா மல் தன்னுடைய வாழ்வின் வசந்த காலங்கள் அனைத்தையும் இருட்டில் கழிக்கிறார்கள். பயங்கரவாதிகளைப் பற்றிய படத்துக்குக் காட்டும் அக்கறையை இந்த அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது இந்த அமைப்புகள் திருப்ப வேண்டும்.
கருணை பொங்கப் பேட்டி அளித்த தமிழக முதல்வரும் இதனைக் கவனத்தில்கொள்ள வேண்டும்!

நன்றி – விகடன்

No comments:

Post a Comment