Thursday, October 25, 2012

கூடங்குளம் அணுமின் நிலையம் நமக்கு(தமிழனுக்கு) தேவையா ?


சமீபகாலமாக தமிழகமக்கள் மட்டுமல்ல இந்தியாவின் அனைத்து மாநில மக்களிடையேயும் காரசார விவாதபொருளாக மாறியிருக்கிறது கூடங்குளமும் அதனை எதிர்ப்பவர்கள் போராட்டமும். அணுவையும், அதன் ஆக்க/அழிவு சக்தியையும் பற்றி அறியாத சாதாரண மக்கள்கூட இன்று அணுவிஞ்ஞானிகள் அளவுக்கு தத்தமது கருத்துக்களை சொல்லிவருகிறார்கள். கூடங்குளம் அணுமின் நிலையம் நமக்கு தேவையா தேவையில்லையா என்று சொல்வதற்கு முன்னால் நானும் அம்மக்களை போலவே பெரிய அணுவிஞ்ஞானி அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது இந்த பதிவு கடந்தகால நிகழ்வுகளையும், கூடங்குளத்தை விளையாட்டுக்களமாக்கி ஆளாளுக்கு செய்துவரும் அரசியல் விளையாட்டுகளையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. நான் இங்கு குறிப்பிடும் நிகழ்வுகளனைத்தும் பிற வலைத்தளத்திலிருந்தும் செய்தித்தாள்களிலிருந்தும்  சேகரிக்கப்பட்டவை.


கூடங்குளம் அணுமின் நிலையம், தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில், கூடங்குளத்தில் இந்திய அணுமின் கழகத்தின் நிர்வாகத்தில் ரஷ்யநாட்டின் உதவியுடன் உருவாகி வரும் அணுமின் நிலையமாகும்.  இத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தினை அன்றைய இந்தியப்பிரதமர் "ராஜீவ்காந்தியும்", ரஷ்ய நாட்டுப் பிரதமர் "மிக்கைல் கொர்பசோவும்" 1988-ஆம் ஆண்டில் கையெழுத்திட்டனர். ஆனால் ரஷ்யா பல நாடுகளாக பிரிந்து போனதனாலும், "இந்திய அணுக்கரு வழங்குவோர் குழுமத்தின்" ஒப்புதல் பெறவில்லை என்ற காரணத்திற்காக அமெரிக்கா அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும், இத்திட்டம் பத்தாண்டுகளுக்கு கிடப்பில் கிடந்தது. பிறகு இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான ஒப்பந்தம் 2001-ஆம் ஆண்டில் கையெழுத்தானது. முதலில் கூடங்குளத்தில் 1000மெகாவாட் அணுமின்திறன் கொண்ட இரு அணு உலைகள் நிறுவுவது என்றும், இரண்டு உலைகளும் செயல்பாட்டுக்கு வரும்பொழுது, மேலும் ஆறு அணு உலைகளை உருவாக்குவது எனவும் திட்டமிடப்பட்டது. 

அணு உலைக்கு மக்களின் எதிர்ப்பு:



துவக்கத்தில் இருந்தே அணு உலைக்கான எதிர்ப்பு ஓரளவு இருந்து வந்தாலும், அண்மையில் ஜப்பான் நாட்டில் "புக்குஷிமா - டா இச்சி" அணு ஆலையில் நடந்த அணு உலை விபத்து காரணமாக ஏற்பட்ட விழிப்புணர்வு மற்றும் ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகள் தங்கள் அணு உலைகளை மூடுவதாக எடுத்த முடிவும் போராட்டத்தின் வீரியம் கூடியதற்கும், போராட்டத்திற்கு திடீர் ஆதரவு பெருகியதற்கும் முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.

இது கூடங்குளம், இடிந்தகரை மக்களை மட்டும் பாதிக்கும் பிரச்சனை இல்லை. கன்னியாகுமரி மாவட்டம் தாண்டி கேரளத்துக் கொல்லம் வரை இதன் பாதிப்புகள் இருக்கும். வெறும் 450 மெகாவாட் உற்பத்தி செய்யும் கல்பாக்கம் அணு உலையைச் சுற்றியுள்ள பகுதியிலேயே புற்றுநோய் உள்ளிட்ட பல பாதிப்புகள் உள்ளன. அப்படியானால் 2000 மெகாவாட் உற்பத்தி செய்யும் கூடங்குளம் அணுவுலை இயக்கப்பட்டால் எவ்வளவு வீரியமிக்க கதிவீச்சு ஏற்படும் என்று சற்றே சிந்தியுங்கள். அணுவுலை இயங்கும் நிலையிலேயே இப்படி என்றால் விபத்து நேர்ந்து உலை வெடித்து சிதறினால் என்ன ஆகும்? "ஹிரோசிமா, நாகாசாகி, மற்றும் செர்னோபில், ஃபுக்குஷிமா" வரிசையில் கூடங்குளமும் இணையும் ஏன் தமிழமேகூட இணையலாம். விபத்தே ஏற்படாமல் 40 ஆண்டுகள் ஓடி முடித்து விட்டாலும்கூட எஞ்சியுள்ள அணுக்கழிவுகளை 40 ஆண்டுகள் கண்ணும் கருத்துமாக பெருத்த பொருட்செலவில் பாதுகாக்க வேண்டும். மட்கா கழிவுகளான நெகிழிகளையே(ப்ளாஸ்டிக்குகளையே) வேண்டாம் என்று சொல்லும் மக்கள் அணுக்கழிவுகளை எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள். இந்தியாவில் 97 சதவிகிதம் மின்சாரம் அணுவுலை தவிர்த்த மின்உற்பத்தி முறையிலேயே உருவாக்கப்படுகின்றது. மின்சார பற்றாக்குறையால் தமிழகம் தத்தளித்துக்கொண்டு இருக்கும் போது கடலுக்கடியில் மனிஇழை(கேபிள் வயர்) போட்டு இலங்கைக்கு மின்சாரம் வழங்கும் அவசியம் என்ன?
  

"மின்சாரம் தேவைக்கு தீர்வு" என்று மக்களிடம் கூறி அணு ஆயுதத்திற்கான மூலப்பொருட்களை பெறுதல் என்பதே அணுவுலையின் உள்நோக்கம். எப்படி? அணுவுலை கழிவுகளை மறுசுழற்சி செய்து அணு ஆயுதமாக மாற்றப்போவதாக இந்திய அணுமின் கழகம் கூறியுள்ளது. விபத்தே நடக்காது என்றால் அணு விபத்து இழப்பீடு சட்டம் எதற்காக? அணு விபத்து பாதுகாப்பு ஒத்திகை எதற்காக? அணு உலையை ஒட்டியக் கடல்பகுதியில் 500 மீட்டர் தூரத்திற்கு மீன்பிடிக்க கூடாது என்று சொல்வது ஏன்? 

செர்னோபில் அணு உலை விபத்திற்குப் பிறகு அடுத்த ஆண்டே கூடங்குளம் அணு உலைத்திட்டத்திற்கு கையெழுத்திட்டது ரஷ்யா. 1993ம் ஆண்டுக்கு பின் அமெரிக்கா அணுவுலைகள் எதுவும் அமைக்கவில்லை. ஜப்பான், ஃபுக்குசிமா அணு உலைகள் வெடித்து சிதறிய பின்னர் சுவிட்சர்லாந்து 2020க்குள்ளும், ஜெர்மனி 2022க்குள்ளும் எல்லா அணுமின் நிலையங்களையும் மூடப்போவதாக அறிவித்துள்ளன. ஊழலும், அலட்சியமும் குறைந்த அல்லது இவையிரண்டும் இல்லாத நாடுகளே விபத்து ஏற்பட்டுவிடுமோ என அஞ்சி தமது அணுவுலைகளை மூடிக்கொண்டிருக்கும்போது ஊழலும், அலட்சியமும் எங்கும் பரவிக்கிடக்கும் இந்தியா போன்ற தேசத்தில் விபத்தே ஏற்படாது என்று எந்தவகையில் மக்கள் நம்புவார்கள். உதாரணத்திற்கு "போப்பால்".  இந்திய அரசு, "யூனியன் கார்பைடு இந்தியா லிமிடட்" என்ற நிறுவனம் பாதுகாப்பானது என்று உத்தரவாதம் அளித்தப்பிறகுதான் 20 ஆயிரம் மக்களை காவுவாங்கிய போப்பால் பேரழிவு நடந்தது. செர்னோபில், ஃபுக்குசிமா அணுவுலைகளும் அமைக்கும்போது பாதுகாப்பானது என்றுதான் கூறப்பட்டது.


அணுவுலைக்கு எதிரான போராட்டம் ஏதோ திடீர் என்று தோன்றியதல்ல, அப்படி கூறுபவர்கள் கொஞ்சம் வலைத்தளத்தில் ஆராய்ந்து பார்க்கவும், கூடங்குளம் திட்டம் கையெழுத்தானபோதே அதாவது 1988ம் ஆண்டு முதலே கூடங்குளம் பகுதியில் அணுவுலைக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  1988ல் மக்கள் எதிர்ப்பினால்தான் அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி அடிக்கல் நாட்டு விழாவிற்கு வரும் பயணத்தை ரத்து செய்தார். 1989ல் அணுவுலைக்கு எதிராக போராடியவர்களை துப்பாக்கி சூடு நடத்தி போராட்டத்தை மத்திய அரசு ஒடுக்கியது.


இவ்வளவு நாட்கள் சும்மா இருந்துவிட்டு அணுவுலை செயல்பாட்டுக்கு வரும்போது இப்படிபட்ட போராட்டம் தேவையா? அதற்கென்று செலவழிக்கப்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் வீணடிக்கப்படலாமா? என்று குமுறுபவர்கள் "போராட்டத்திற்கான ஆதரவுதான் தற்போது பெருகியதே தவிர, போராட்டம் ஒன்றும் தற்போது தொடங்கப்பட்டதல்ல" என்பதை புரிந்து கொள்ளவேண்டும். "அதற்கென்று செலவழிக்கப்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் வீணடிக்கப்படலாமா?" என்று கேட்கிறீர்கள். அதற்கு ஒரு உதாரணம், உங்கள் வீட்டு பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறீர்கள். பல லட்சம் ரூபாய் செலவில் திருமணத்திற்கும் ஏற்பாடு செய்கிறீர்கள். திருமணத்திற்கு முந்தையநாள் மாப்பிள்ளைக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக தெரியவருகிறது. உடனே நீங்கள் உங்கள் வீட்டு பெண்ணின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திருமணத்தை நிறுத்துவீர்களா? இல்லை பல லட்சம் ரூபாய் செலவழித்து திருமண ஏற்பாடுகளெல்லாம் செய்தாகிவிட்டதே என்று திருமணத்தை நடத்துவீர்களா? "பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் செய்துதருவதாக அரசு சொல்கிறதே, பிறகு ஏன் வீண்பயம்?" என்று நீங்கள் கேட்கலாம்.அதையேதான் நானும் கேட்கிறேன் எய்ட்ஸ் பாதித்த மாப்பிள்ளையிடம் ஆணுறை போன்ற பாதுகாப்பு உபகரணத்தை பயன்படுத்த சொல்லி உங்கள் வீட்டு பெண்ணை அவருக்கே திருமணம் செய்து வைக்கலாமே? செய்வீர்களா? உங்களுக்கு வந்தால் நியாயமான பயம், அம்மக்களுக்கு வந்தால் வீண்பயம்? (வடிவேலு சொல்வதைப்போல உங்களுக்கு வந்தால் இரத்தம், அம்மக்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?) 


கூடங்குளம் போராட்டத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுபவர் "திரு.உதயகுமார்". மத்திய அரசும், அணுவைப்பற்றி அடிப்படை அறிவுகூட இல்லாமல் அணுவுலைக்கு ஆதரவானவர்கள் என பிதற்றிக்கொள்பவர்களும் அவருக்கு "தேசத்துரோகி", "அமெரிக்க உளவாளி" போன்ற பல்வேறு பட்டங்களை வாரிவழங்கியுள்ளனர். மேலும் சில-பல இந்துத்துவ இயக்கங்களும் அவருக்கு எதிராக வேட்டியை மடித்துக்கொண்டு மல்லுக்கு நிற்கின்றன. இந்த இந்துத்துவ இயக்கங்கள் காந்தி காலத்திலிருந்து சமீபத்திய காலம்வரை எப்போதுமே காங்கிரஸ்-க்கும் அதன் செயல்பாட்டுக்கும் ஆதரவாக இருந்ததில்லை. ஆனால் அணுவுலையை திறக்கவேண்டும் என்கிற நிலைப்பாட்டில் இந்த இந்துத்துவ இயக்கங்கள் காங்கிரஸ்-க்கு ஆதரவாக மன்னிக்கவும் அணுவுலைக்கு ஆதரவாக செயல்படுவது ஆச்சர்யத்திலும் பெரிய ஆச்சர்யம். காரணம் உதயகுமார் கிறிஸ்த்தவ அமைப்புகளுடன் கைகோர்த்துக்கொண்டு கிறிஸ்த்துவ மக்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்ற அவர்களது எண்ணம்தான். அவ்வியக்கங்கள் ஒன்றை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். தற்போது போராட்டம் நடைபெற்றுவரும் கூடங்குளம், இடிந்தகரை மற்றும் அருகிலுள்ள பிற ஊர்களிலும் எத்தனை இந்து சகோதர சகோதரிகள் வாழ்ந்து வருகிறார்கள்? அவர்களில் எத்தனை பேர் மீன்பிடித்தொழிலை நம்பி இருக்கிறார்கள் என்றும் முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இந்த தகவலை அறிய பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை "கூடங்குளம், இடிந்தகரை மற்றும் அருகிலுள்ள பிற ஊர்களின் வாக்காளர் பட்டியலை" எடுத்துப்பார்த்தாலே தெரியும்.  அவர்கள் அனைவருமே போராட்டத்திற்கு ஆதரவளிக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. அவ்வளவு ஏன், போராட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரே ஒரு "இந்து" தான். ஆக இதுஒன்றும் கிறிஸ்த்தவ பாதிரியார்கள் தலைமையில் கிறிஸ்த்தவ தொண்டு நிறுவனங்களிடமிருந்து கட்டுகட்டாக பணத்தை பெற்றுக்கொண்டு கிறிஸ்த்தவ இயக்கங்களால் நடத்தப்படும் மதரீதியான போரட்டமல்ல என்பதை இனியாவது உணர்ந்து கொள்ளுங்கள்.


கூடங்குளம் செயல்பாட்டுக்கு வந்தால் தமிழகத்தின் மின்வெட்டு பிரச்சனை அடியோடு ஒழிந்துவிடும். அதை தடுப்பதுமாதிரியான செயல்களில் உதயகுமார் ஈடுபட்டுள்ளதால்தான் தமிழகத்தின் மின்வெட்டு பிரச்சனை தீராமல் உள்ளது, மின்வெட்டு பிரச்சனைக்கு ஒரே தீர்வு கூடங்குளம் அணுமின்சாரம் தான் என புலம்பித்தவிப்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். தற்போது கூடங்குளத்திலுள்ள இரு அணுவுலை மூலமாகவும் அதன் மொத்த மதிப்பீட்டிலிருந்து அதிகபட்சமாக 70% மின்சாரம் மட்டுமே தயாரிக்க முடியும். அதாவது ஒரு உலையிலிருந்து அதன் உச்சபட்ச மதிப்பான 1000மெகாவாட்டில், தயாரிக்கப்படும் அதிகபட்ச அளவீடு சுமார் 700மெகாவாட் மட்டுமே(அதுவும் எல்லா அம்சங்களும், எரிபொருட்களும் முழுமையாக இருக்கும்பட்சத்தில், இதில் வேறுபாடு இருக்கும்பட்சத்தில் தயாரிக்கப்படும் அளவீடு குறையுமே ஒழிய கூட வாய்ப்பில்லை என இந்திய அணுசக்தி கழக அறிக்கையிலேயே கூறப்பட்டுள்ளது.) ஆக இரு அணுவுலை மூலமாக மொத்தம் கிடைக்கப்போவது(700+700=) 1400மெகாவாட் மட்டுமே. 

2004ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அணுமின்-பங்கீடு தொடர்பான உடன்படிக்கையின்படி இந்த 1400மெகாவாட் மின்சாரத்தில் 442மெகாவாட் மின்சாரம் கர்நாடகாவுக்கும்,  266மெகாவாட் மின்சாரம் கேரளாவுக்கும்,  67மெகாவாட் மின்சாரம் புதுச்சேரிக்கும் பகிர்ந்தளிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சுமார் 100மெகாவாட் மின்சாரம் "உற்பத்தி மற்றும் பராமரிப்பு செலவுகளுக்கு" எடுத்துக்கொள்ளப்படும். மீதமுள்ள 525மெகாவாட் மின்சாரத்தில் 300மெகாவாட் மின்சாரம் மத்திய மின்தொகுப்புக்கு(Central power grid) அனுப்பப்படும் (இந்த  300மெகாவாட் மின்சாரத்தில் பெரும்பகுதியை அல்லது முழுவதுமாக, ஆந்திராவில் நிலவிவரும் கடுமையான மின்பற்றாக்குறையை சமாளிக்க ஆந்திராவுக்கு வழங்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் மத்திய அரசை கேட்டுள்ளார்). எனவே மீதமுள்ள 225மெகாவாட் மின்சாரம் மட்டுமே தமிழகத்துக்கு கிடைக்க வாய்ப்பு. "அணுமின்சார-பங்கீட்டின்படி ஒவ்வொரு மாநிலத்துக்கும் பங்கிடப்பட்ட கூடங்குளம் அணுமின்சாரம் துளிஅளவுகூட குறையாமல் வழங்கப்படும்" என்று மத்திய மின்சாரத்துறை இணை அமைச்சர் (Minister of State for Power) கே.சி.வேணுகோபால் கடந்த 2012, செப்டம்பர் மாதம் 7ம் தியதி அன்று மாநிலங்களவையில் உறுதிபட கூறியுள்ளார். எனவே 225மெகாவாட் மின்சாரத்துக்கு அதிகமாக ஒரு துளிஅளவுகூட அதிகமாக நமக்கு(தமிழ்நாட்டுக்கு) கிடைக்கப்போவதில்லை என்பது உறுதி. 


"கூடங்குளம் செயல்பாட்டுக்கு வந்தால் தமிழகத்தின் மின்வெட்டு பிரச்சனை அடியோடு ஒழிந்துவிடும், தமிழகம் மின்மிகை மாநிலம் ஆகிவிடும்" என்று கூப்பாடு போட்டு கனவு காண்பவர்கள் வெறும் 225மெகாவாட் மின்சாரத்தை வைத்துக்கொண்டு பெரிதாக ஒன்றும் சாதித்துவிடமுடியாது(அதாவது ஒரு மயிரையும் புடுங்கமுடியாது) என்பதை புரிந்து கொள்ளவும். இந்த 225மெகாவாட் மின்சாரத்தை ஏன் காற்றாலை மூலமாகவோ, அனல் மின்சக்தி மூலமாகவோ நீர்மின்சக்தி மூலமாகவோ சூரியமின்சக்தி மூலமாகவோ தயாரிக்க முடியாது?, குறைந்த செலவில் அதிக மின்உற்பத்தி செய்ய பல்வேறு வழிகள் இருந்தும், அதிக பொருட்செலவில் அதிக ஆபத்துக்களையும் குறைந்த மின்சாரத்தையும் தயரிக்கும் அணுவுலைகளைத் தேர்வு செய்ய வேண்டிய அவசியம் என்ன? காரணம் இதற்கான திட்ட மதிப்பீடு(project value) சுமார் 3.5 பில்லியன் (13615 கோடி) அமெரிக்க டாலராகும். திட்ட மதிப்பீடு எவ்வளவுக்கெவ்வளவு அதிகமோ அவ்வளவுக்கவ்வளவு ஆட்டையப்போடலாம். இன்னும் சிறிதுகாலத்தில் "கூடங்குளம் மெகா ஊழல்" என்ற ஒன்று வெளிவந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

மொத்தத்தில் தமிழனுக்கு எந்த அரசானாலும் நாமத்தை மட்டுமே போடும் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகின்றது. இதன்மூலம் நாம் புரிந்துகொள்ள வேண்டியது "ஆபத்துமட்டும் தமிழனுக்கு, தமிழனின் உயிரை பணையம் வைத்து கிடைக்கும் மின்சாரம் மற்றவர்களுக்கு, தமிழன் வாயில் விரலைவைத்து சூப்பிக்கொண்டு போகவேண்டும்!". அதுமட்டுமல்ல "எப்படி விரல் சூப்புவது?" என்பதை காங்கிரஸ் மற்றும் அதன் ஜால்ரா கோஷ்டிகளும் நமக்கு அடிக்கடி சொல்லிதந்துகொண்டே இருக்கின்றன. கூடவே சில கம்யூனிஸ்ட் காம்ரேட்-களும், சில திராவிட இயக்கங்களும்,  சில இந்துத்துவ கட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு காங்கிரஸ்-க்கு ஜால்ரா அடிக்கும் பணியை செவ்வனே செய்து வருகின்றன. தமிழன் இளிச்சவாயனாக ஆக்கப்படுவது மீண்டும் ஒருமுறை வெற்றிகரமாக நிகழ்த்தப்படுகிறது. மக்களே ஒன்றை யோசித்து பாருங்கள் இந்த ஜால்ரா கோஷ்டிகள் அனைவருமே "அணுவுலையை உடனே திறக்கவேண்டும்!" என்றும்  "தேசத்துரோகி உதயகுமாரை கைதுசெய்யவேண்டும்" என்றும் கோஷமிடுகிறார்களே ஒழிய "கூடங்குளம் அணுவுலையில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே தர வேண்டும்"  என என்றைக்காவது சொல்லியிருக்கிறார்களா? காரணம் காங்கிரஸ் மகான்கள் எழுதிக்கொடுத்த வசனத்தை வரிபிசகாமல் வாசிப்பவர்கள் இவர்கள்.

அணுகதிர்வீச்சால் ஒரு சந்ததியினர் மட்டுமல்ல பின்வரும் அனைத்து சந்ததியினருக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு ஆங்கில தொலைக்காட்சியான பி.பி.சி-ஆல் செர்னோபில் விபத்திற்குப்பிறகு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று எடுக்கப்பட்டு தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட "செர்னோபில் இதயம்" என்ற ஆவணப்படமே சாட்சி. இத்தகைய பாதிப்புகள் நம் இனத்தவர்களுக்கு, நம் கண்முன்னே வாழ்பவர்களுக்கு நடந்துவிடகூடாது என போராடும் ஒருவனுக்கு இந்த அரசும் ஒரு சிலரும் வழங்கும் பெயர் "தேசத்துரோகி" என்றால் திரு.உதயகுமார் தேசத்துரோகியாகவே இருந்துவிட்டு போகட்டும். 


கூடங்குளம் பற்றி நாம் எவ்வளவு காலம் பேசுவோம் ? மின்வெட்டு பிரச்சனை தீரும்வரை அல்லது கூடங்குளத்தில் ஊடக வெளிச்சம் இருக்கும்வரை, அதன் பிறகு? வழக்கம்போல மறந்துவிடுவோம், மறதி நம் தேசிய வியாதி என்பதனை மீண்டும் ஒருமுறை நிரூபிப்போம். அனால் அம்மக்கள் அப்படியல்ல "போராடினார்கள்!", "போராடிக்கொண்டு இருக்கிறார்கள்!", "இனிமேலும் போராடுவார்கள் அணுவுலையை மூடும்வரை". ஒருவேளை கூடங்குளம் போராட்டக்காரர்கள் தோற்கடிக்கப்பட்டு, கூடங்குளம் அணுவுலை முற்றிலும் செயல்பாட்டுக்கு வருமேயானால் நான் கூறியதுபோல (வழக்கம்போல காங்கிரஸ் மற்றும் அதன் ஜால்ராக்களின் பேராதரவுடன்) "தமிழனுக்கு பட்டை நாமம்" நிச்சயம் போடப்படும், அப்பொழுதாவது நான் குறிப்பிட்டது உணமையென உணர்வீர்கள் என்று  நம்புகிறேன்.

இறுதியாக நான் இந்த பதிவுக்கு கொடுத்த தலைப்பான "கூடங்குளம் அணுமின் நிலையம் நமக்கு(தமிழனுக்கு) தேவையா?" என்பதை சோற்றில் உப்பு போட்டு சாப்பிடும் சொரணை உள்ள தமிழர்கள் ஒருமுறைக்கு பத்துமுறை தமக்குள் சொல்லிப்பார்த்து முடிவு செய்து கொள்ளுங்கள்.